மத்தேயு 18:23-34
மத்தேயு 18:23-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது. அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான். “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான். வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான். “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான். “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான். “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள். “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
மத்தேயு 18:23-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
மத்தேயு 18:23-34 பரிசுத்த பைபிள் (TAERV)
“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான். “ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான். “பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான். “மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். “ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள். “பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.
மத்தேயு 18:23-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.