மத் 18:23-34

மத் 18:23-34 IRVTAM

எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.