மத்தேயு 17:14-21

மத்தேயு 17:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

மத்தேயு 17:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான். நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான். “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார். இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.

மத்தேயு 17:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான். அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

மத்தேயு 17:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். அவன், “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான். இயேசு, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான். பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள், “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்” என்று கூறினார்.