மத்தேயு 17:14-21

மத்தேயு 17:14-21 TCV

மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான். நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான். “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார். இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.