மத்தேயு 12:9-14
மத்தேயு 12:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார். அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.
மத்தேயு 12:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார். அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது. அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
மத்தேயு 12:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்கள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” என்று கேட்டார்கள். இயேசு, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா? ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார். பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம், “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று. ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மத்தேயு 12:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார். பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று. அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.