மத்தேயு 12:9-14

மத்தேயு 12:9-14 TCV

இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே” என்றார். அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது. அப்பொழுது பரிசேயர் வெளியே போய், இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள்.