மத்தேயு 12:38-50
மத்தேயு 12:38-50 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார். இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மத்தேயு 12:38-50 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும். நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார். இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான். இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
மத்தேயு 12:38-50 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து, திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார். இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.
மத்தேயு 12:38-50 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர், பரிசேயர்கள் சிலரும் வேதபாரகர்கள் சிலரும் இயேசுவுக்கு மறுமொழி கூறினார்கள். அவர்கள், “போதகரே, உம்மை நிரூபிக்கும்படியாக ஓர் அற்புதம் செய்து காட்டும்” என்று கேட்டனர். அதற்கு இயேசு, “பொல்லாதவர்களும் பாவிகளும்தான் அற்புதங்களை ஆதாரமாகக் கேட்பார்கள். ஆனால், எந்த அற்புதமும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படமாட்டாது. தீர்க்கதரிசி யோனாவிற்கு நிகழ்ந்த அற்புதம் மட்டுமே ஆதாரமாக கொடுக்கப்படும். யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார். மேலும் நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில் நினிவே பட்டணத்து மனிதர் உயிர்த்தெழுந்து இன்று வாழ்கின்ற உங்கள் தவறுகளை நிரூபிப்பார்கள். ஏனென்றால், யோனாவின் போதனையைக் கேட்டு, அவர்கள் மனந்திரும்பினார்கள். நான் சொல்லுகிறேன், நான் யோனாவைக் காட்டிலும் மேன்மையானவன். “நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில், தென்திசையின் இராணி உயிர்த்தெழுந்து உங்கள் மேல் குற்றம் சுமத்துவாள். ஏனென்றால், அந்த இராணி மிகத் தொலைவிலிருந்து சாலமோனின் ஞானம் செறிந்த போதனைகளைக் கேட்க பயணப்பட்டு வந்தாள். நான் சொல்லுகிறேன், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவன். “பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை. எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது. பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார். இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். ஒருவன் இயேசுவிடம், “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான். இயேசு, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.