அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “பொல்லாத, வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள். ஆனால், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும். நியாயத்தீர்ப்பின்போது, நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று, இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள்; ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது. ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அங்கு போகிறபோது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும், ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும். இவ்விதமாகவே, இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.
இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள்” என்றான்.
இயேசு அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார். பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்றார்.