மத்தேயு 10:21-42
மத்தேயு 10:21-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள். என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான். நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்! “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள். உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன். மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன். “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன். “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்; ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’ “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல. தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
மத்தேயு 10:21-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான். சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 10:21-42 பரிசுத்த பைபிள் (TAERV)
“சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதனிமித்தம் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள். ஆனால், இறுதிவரை உறுதியாயிருக்கிறவன் இரட்சிக்கப்படுவான். ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது. “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு வேலைக்காரன் தன் முதலாளியைக் காட்டிலும் சிறப்பானவனல்ல. ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள். “எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். நான் இவற்றை இருளில் (இரகசியமாக) கூறுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றை வெளிச்சத்தில் கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் இவற்றை அமைதியாக உங்களுடன் மட்டும் மெதுவாகப் பேசுகிறேன். ஆனால் நீங்கள் இவற்றைத் தாராளமாக எல்லா மக்களுக்கும் கூற வேண்டும். “மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆத்துமாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும். அவர் சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்திற்கு அனுப்ப வல்லவர். பறவைகள் விற்கப்படும் பொழுது இரண்டு சிறிய பறவைகளின் விலை ஓரணா மட்டுமே. ஆனால் இரண்டில் ஒன்று கூட உங்கள் பிதாவானவரின் அனுமதி இன்றி சாக முடியாது. உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள். “ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் (நின்று கொண்டு) என்னிடம் நம்பிக்கை உடையவனாய் இருப்பதாகக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவான். நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். மாறாக, ஒருவன் மற்றவர்களுக்கு முன்னால் என்னிடம் நம்பிக்கை உடையவனல்ல எனக் கூறினால், அவன் எனக்குப் பாத்திரவானல்ல. நான் பரலோகத்தில் உள்ள என் பிதாவின் முன்னிலையில் இப்படியே கூறுவேன். “பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன். கீழ்க்கண்டவை நடந்தேறவே நான் வந்துள்ளேன்: “‘மகன் தன் தந்தைக்கும், மகள் தன் தாய்க்கும், மருமகள் தன் மாமியாருக்கும், எதிராவார்கள்.’ தன் குடும்பத்து மக்களே ஒருவருக்கு ஒருவர் எதிராவார்கள். “என்னைவிடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் மகனையும் மகளையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைப் பின்பற்றும்பொழுது உண்டாகும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளாதவன், என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல. என்னைவிடவும் தன் வாழ்வை அதிகம் நேசிக்கிறவன், மெய்யான வாழ்வை இழக்கிறான். எனக்காகத் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறவன், மெய்யான வாழ்வை அடைவான்.” “உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொண்டவன். என்னை ஏற்றுக்கொள்கிறவன், என்னை அனுப்பியவரையும் (தேவனையும்) ஏற்றுக்கொண்டவன். தீர்க்கதரிசியைக் கண்டு அவரை ஒப்புக்கொள்கிறவன், தீர்க்கதரிசி பெறும் வெகுமதியைப் பெறுவான். நல்லவரை அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறவன், நல்லவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவான். யாரேனும் என்னைப் பின்பற்றுகிறவர்களுக்குச் சிறிய அளவேனும் உதவினால், அவன் தக்க வெகுமதியை நிச்சயம் பெறுவான். என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்.”
மத்தேயு 10:21-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.