மத் 10:21-42

மத் 10:21-42 IRVTAM

சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை. சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது. உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான். சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.