லூக்கா 9:37-62

லூக்கா 9:37-62 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார். அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள். சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது. இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார். பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான். அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார். இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார். அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை. அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள். அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார். இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான். அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.

லூக்கா 9:37-62 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள். பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார். பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து, தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு, மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள். அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.

லூக்கா 9:37-62 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான். இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார். அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள். இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள். இயேசுவின் சீஷர்கள் தமக்குள் மிகவும் முக்கியமானவர் யார் என்பதைக் குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருந்தார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு ஒரு சிறிய குழந்தையை எடுத்துத் தன்னருகே, அதனை நிறுத்தினார். பின்பு தனது சீஷர்களை நோக்கி, “என் பெயரினால் ஒருவன் ஒரு சிறிய குழந்தையை இதுபோல ஏற்றுக்கொண்டால் அவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்ளும்போது அம்மனிதன் என்னை அனுப்பினவரை (தேவனையும்) ஏற்றுக்கொள்கிறான். உங்களில் மிகவும் தாழ்மையுள்ள மனிதன் எவனோ, அவனே மிகவும் முக்கியமான மனிதன் ஆவான்” என்றார். “குருவே, மனிதர்களை விட்டு வெளியேறும்படியாக உம்முடைய பெயரினால் ஒரு மனிதன் பிசாசுகளை வற்புறுத்திக்கொண்டிருந்தான். அவன் நம் கூட்டத்தைச் சாராதவனாகையால் அவன் அதைச் செய்யாதபடி நிறுத்த நாங்கள் கூறினோம்” என்றான் யோவான். இயேசு யோவானை நோக்கி, “அவனைத் தடுக்காதீர்கள். ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக இல்லையென்றால் அவன் உங்களைச் சார்ந்தவன்” என்றார். இயேசு உலகை விட்டு பரலோகத்திற்குச் செல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எருசலேமுக்கு போக முடிவெடுத்தார். இயேசு சில மனிதர்களை அவருக்கு முன்பாக அனுப்பினார். இயேசுவுக்கு எல்லாவற்றையும் ஆயத்தம் செய்வதற்காக அம்மனிதர்கள் சமாரியாவிலுள்ள ஒரு நகரை அடைந்தனர். இயேசு எருசலேமுக்குச் செல்ல விரும்பியதால் அந்நகரத்து மக்கள் இயேசுவை வரவேற்க விரும்பவில்லை. இயேசுவின் சீஷராகிய யாக்கோபும், யோவானும் இதைக் கண்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, வானிலிருந்து நெருப்பு வரவழைத்து, அம்மக்களை நாங்கள் அழிப்பதை விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர். ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார். பின்பு இயேசுவும், அவரது சீஷர்களும் மற்றொரு நகரத்துக்குச் சென்றனர். அவர்கள் எல்லாரும் பாதை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஒருவன் இயேசுவை நோக்கி, “எந்த இடத்துக்கு நீங்கள் சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றி வருவேன்” என்றான். இயேசு பதிலாக, “நரிகள் வசிப்பதற்குக் குழிகள் உண்டு. பறவைகள் வசிப்பதற்குக் கூடுகள் உண்டு. ஆனால் மனித குமாரன் தனது தலையைச் சாய்ப்பதற்குக் கூட எந்த இடமும் இல்லை” என்று கூறினார். இயேசு இன்னொரு மனிதனை நோக்கி, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அம்மனிதன், “ஆண்டவரே, நான் போய் முதலில் எனது தந்தையை அடக்கம் செய்த பின்னர் வருவேன்” என்றான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “மரித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான மரித்தோரைப் புதைக்கட்டும். நீ போய் தேவனின் இராஜ்யத்தைப் பற்றிக் கூற வேண்டும்” என்றார். மற்றொரு மனிதன், “ஆண்டவரே, நான் உம்மை பின்பற்றுவேன். ஆனால் நான் போய் முதலில் என் குடும்பத்தாரிடம் விடை பெற்று வருவேன்” என்றான். இயேசு, “ஒருவன் வயலை உழ ஆரம்பித்துப் பின்னோக்கி பார்த்தால் அவன் தேவனின் இராஜ்யத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தாதவன் ஆவான்” என்றார்.

லூக்கா 9:37-62 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள். பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப்போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார். பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.