மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.
பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி, அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார். அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான். அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.
பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து, தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு, மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.
அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.