லூக்கா 9:37-45

லூக்கா 9:37-45 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது. மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை. ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது. அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான். அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார். அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார். அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள்.

லூக்கா 9:37-45 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான். சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான். இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.

லூக்கா 9:37-45 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான். இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார். அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள். இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள்.

லூக்கா 9:37-45 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.