லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:37-45

லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:37-45 TAERV

மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான். இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார். அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள். இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி, “நான் உங்களுக்கு இப்போது கூறப்போகிற செய்திகளை மறவாதீர்கள். மனிதகுமாரன் சில மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொடுக்கப்படுவார்” என்றார். ஆனால் அவர்களோ அவர் கூறியதன் பொருளை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளாதபடி அதன் பொருள் அவர்களுக்கு மறைமுகமானதாய் இருந்தது. அவர்களோ இயேசு கூறியதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளப் பயந்தார்கள்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:37-45 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்