லூக்கா 7:1-30

லூக்கா 7:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களுடன் சென்றார். அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள். இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள். அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள். கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார். பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார். இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது. யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார். எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’ நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார். வரி வசூலிப்போர் உட்பட, எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று அங்கீகரித்தார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் திருமுழுக்கு பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.

லூக்கா 7:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான். அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான். நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள். மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள். அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள். இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி, அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார். எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது. இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள். அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ? இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள். இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான். பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள். ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

லூக்கா 7:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு இந்த எல்லாக் காரியங்களையும் மக்களுக்குச் சொல்லி முடித்தார். பின்பு இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார். கப்பர்நகூமில் இராணுவ அதிகாரி ஒருவன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன் ஒருவன் நோயுற்றிருந்தான். அவன் இறக்கும் தருவாயில் இருந்தான். அந்த அதிகாரி அவ்வேலைக்காரனை மிகவும் நேசித்தான். அந்த அதிகாரி இயேசுவைப் பற்றிக்கேள்விப்பட்டபோது, சில வயதான யூதத்தலைவர்களை இயேசுவிடம் அனுப்பினான். இயேசு வந்து வேலைக்காரனைக் குணப்படுத்தக் கேட்டுக்கொள்ளும்பொருட்டு அவர்களை அதிகாரி அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். அதிகாரிக்கு உதவுமாறு இயேசுவை அவசரமாக வேண்டினர். அவர்கள், “உம்முடைய உதவியைப் பெறும் அளவுக்கு இந்த அதிகாரி உண்மையிலேயே தகுதி வாய்ந்தவன்தான். அவன் நம் மக்களை நேசிக்கிறான். நமக்காக ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான்” என்றனர். எனவே இயேசு அந்த மனிதர்களோடு புறப்பட்டார். இயேசு அந்த அதிகாரியின் வீட்டை நெருங்குகையில் அதிகாரி தனது நண்பர்களை அனுப்பினான். அவர்களை இயேசுவிடம் “கர்த்தாவே, நீர் என் வீட்டுக்கு வர வேண்டியதில்லை. எங்கள் வீட்டிற்கு உம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். அதனால்தான் நான் நேரிடையாக உம்மிடம் வரவில்லை. நீர் கட்டளையிடும். என் வேலைக்காரன் குணம் பெறுவான். உம்முடைய அதிகாரத்தை நான் அறிவேன். பிற மனிதர்களின் அதிகாரத்துக்குட்பட்ட மனிதன் நான். எனக்குக் கீழ் பல வீரர்கள் உண்டு. அவர்களில் ஒருவனை நான் ‘போ’ என்றால் போகிறான். மற்றொருவனை ‘வா’ என்றால் வருகிறான். என் வேலையாளிடம் ‘இதைச் செய்’ என்றால் உடனே அவன் கீழ்ப்படிகிறான்” என்று கூறுமாறு அனுப்பினான். இதைக் கேட்டபோது இயேசு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். தன்னைத் தொடர்ந்து வருகிற மக்களை நோக்கித் திரும்பினார். “இஸ்ரவேல் மக்களிடம் கூட இல்லாத வேறெங்கும் காணப்படாத, உயர்ந்த விசுவாசத்தை இவனிடம் கண்டேன்” என்றார். இயேசுவைக் காண அனுப்பப்பட்ட மனிதர்கள் அதிகாரியின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டனர். மறுநாள் இயேசு நாயீன் என்னும் நகரத்திற்குச் சென்றார். இயேசுவின் சீஷர்களும், மிகப் பெரிய கூட்டமான மக்கள் பலரும் அவரோடு பிராயாணம் செய்தனர். நகர வாசலை இயேசு நெருங்கியபோது ஒரு மரண ஊர்வலத்தைக் கண்டார். விதவையான ஒரு தாய் தனது ஒரே குமாரனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனதுருகினார். இயேசு அவளிடம் சென்று, “அழாதே” என்றார். பாடையின் அருகே வந்து இயேசு அதைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் நின்றனர். இயேசு இறந்த மனிதனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன்” என்றார். இறந்துபோன குமாரன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார். எல்லா மக்களும் ஆச்சரியமுற்றனர். அவர்கள், “ஒரு மகா தீர்க்கதரிசி நம்மிடையே வந்துள்ளார்” என்றனர். மேலும் அவர்கள், “தேவன் தம் மக்களைக் கவனித்துக்கொள்கிறார்” என்றார்கள். இயேசுவைப் பற்றிய இச்செய்தி யூதேயா முழுவதும் அதைச் சூழ்ந்த எல்லா இடங்களிலும் பரவிற்று. இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான். “நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவர் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள கர்த்தரிடம் அவர்களை யோவான் அனுப்பினார். அவ்விதமாகவே அந்த மனிதர் இயேசுவிடம் வந்தனர். அவர்கள், “யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம், ‘நீர்தானா வருகிறவர், அல்லது இன்னொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கேட்டுவர அனுப்பினார்” என்றார்கள். அப்போது இயேசு பலரையும் காய்ச்சலில் இருந்தும் நோய்களில் இருந்தும் குணமாக்கவும், பிசாசினால் வரும் அசுத்த ஆவிகளினின்று விடுதலை பெறவும் செய்தார். குருடர்கள் பலர் மீண்டும் பார்வை பெறுமாறு அவர்களைக் குணப்படுத்தினார். யோவானின் சீஷர்களை நோக்கி இயேசு, “இங்கு நீங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் கூறுங்கள். குருடர்கள் குணமடைந்து பார்க்கிறார்கள். முடவர்கள் குணமடைந்து நடக்கிறார்கள். தொழுநோயாளிகள் நலம் பெறுகின்றனர். செவிடர்கள் நலம் பெற்றுக் கேட்கிறார்கள். மரித்தோர் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி ஏழைகளுக்குச் சொல்லப்படுகிறது. என்னை ஏற்றுக்கொள்ளுகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்!” என்றார். யோவானின் தொண்டர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் இயேசு யோவானைக் குறித்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்: “நீங்கள் வனாந்தரத்துக்கு எதைப் பார்க்கச் சென்றீர்கள்? காற்றில் அசையும் நாணலையா? நீங்கள் எதைப் பார்க்கும்படியாக வெளியே சென்றீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்த மனிதனையா? அழகிய மெல்லிய ஆடைகள் அணிந்த மக்கள் ராஜாக்களின் உயர்ந்த அரண்மனைகளில் வாழ்வார்கள். உண்மையாகவே யாரைப் பார்க்கச் சென்றீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், யோவான் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மிகவும் சிறந்தவன். இவ்வாறு யோவானைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது: “‘கேளுங்கள்! உங்களுக்கு முன்பாக என் செய்தியாளனை நான் அனுப்புவேன். அவன் உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்வான்.’ நான் உங்களுக்குச் சொல்கிறேன். உலகில் பிறந்த எந்த மனிதனைக் காட்டிலும் யோவான் பெரியவன். ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் முக்கியத்துவம் குறைந்தவன் கூட யோவானைக் காட்டிலும் பெரியவன்.” (யோவானின் போதனைகளை மக்கள் கேட்டபோது தேவனின் போதனைகள் நல்லவை என்று ஒத்துக்கொண்டனர். வரி வசூலிப்பவர்களும் அதனை ஆமோதித்தனர். இம்மக்கள் யோவானால் ஞானஸ்நானம் பெற்றனர். ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)

லூக்கா 7:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான் ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங்குருடருக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப்பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.