லூக்கா 7:1-30

லூக்கா 7:1-30 TCV

கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார். அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான். நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன். ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள். எனவே இயேசு அவர்களுடன் சென்றார். அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன். ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான். நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான். இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார். அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள். இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள். அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள். கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார். பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார். இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார். அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள். இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது. யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான். அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார். எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார். யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள். அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். “ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’ நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார். வரி வசூலிப்போர் உட்பட, எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று அங்கீகரித்தார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் திருமுழுக்கு பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 7:1-30