லூக்கா 5:27-39

லூக்கா 5:27-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிற தென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும். புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

லூக்கா 5:27-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான். பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார். சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள். அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார். பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது. யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும். யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”

லூக்கா 5:27-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள். வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது. ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும். புதிய திராட்சைரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும். அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

லூக்கா 5:27-39 பரிசுத்த பைபிள் (TAERV)

இது நடந்த பின்னர், இயேசு வெளியே சென்றுகொண்டிருக்கையில் வரி அலுவலகத்தின் முன்பாக வரி வசூலிப்பவன் ஒருவன் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவன் பெயர் லேவி. இயேசு அவனை நோக்கி, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தான். பின்பு, லேவி, இயேசுவுக்குப் பெரிய விருந்தளித்தான். லேவியின் வீட்டில் அந்த விருந்து நடந்தது. வரி வசூலிப்பவர்கள் பலரும் வேறு சில மக்களும் அவர்களோடு மேசையின் முன் அமர்ந்திருந்தனர். பரிசேயர்களும், வேதபாரகரும் இயேசுவின் சீஷர்களிடம் புகார் கூறத்தொடங்கி, “நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் மற்ற தீய மக்களோடும் அமர்ந்து அவர்களோடு உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று வினவினர். அவர்களுக்கு இயேசு, “ஆரோக்கியமான மக்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயுற்றோருக்குத்தான் மருத்துவர் தேவை. நல்ல மனிதர்களிடம் மனம் மாறும்படியாகக் கேட்பதற்கு நான் வரவில்லை. தீயவர்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளும்படியாகக் கேட்பதற்கே நான் வந்திருக்கிறேன்” என்று பதிலுரைத்தார். அவர்கள் இயேசுவிடம், “யோவானின் சீஷர்கள் அடிக்கடி உபவாசிக்கவும், பிரார்த்திக்கவும் செய்கிறார்கள். பரிசேயர்களின் சீஷர்களும் அதே மாதிரி செய்கிறார்கள். ஆனால் உங்கள் சீஷர்கள் எப்போதும் உண்பதும், குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள். இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது மணமகன் உடனிருக்கையில் மணமகனின் நண்பர்களை உண்ணாதிருக்கும்படியாகக் கூற முடியாது. ஆனால் அவர்களை விட்டு மணமகன் பிரிந்து செல்லும் காலம் வரும். அப்போது அவனது நண்பர்கள் உபவாசம் இருப்பர்” என்றார். அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை. மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும். மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள். பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார்.