லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:27-39

லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:27-39 TAERV

இது நடந்த பின்னர், இயேசு வெளியே சென்றுகொண்டிருக்கையில் வரி அலுவலகத்தின் முன்பாக வரி வசூலிப்பவன் ஒருவன் உட்கார்ந்திருக்கக் கண்டார். அவன் பெயர் லேவி. இயேசு அவனை நோக்கி, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தான். பின்பு, லேவி, இயேசுவுக்குப் பெரிய விருந்தளித்தான். லேவியின் வீட்டில் அந்த விருந்து நடந்தது. வரி வசூலிப்பவர்கள் பலரும் வேறு சில மக்களும் அவர்களோடு மேசையின் முன் அமர்ந்திருந்தனர். பரிசேயர்களும், வேதபாரகரும் இயேசுவின் சீஷர்களிடம் புகார் கூறத்தொடங்கி, “நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் மற்ற தீய மக்களோடும் அமர்ந்து அவர்களோடு உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று வினவினர். அவர்களுக்கு இயேசு, “ஆரோக்கியமான மக்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயுற்றோருக்குத்தான் மருத்துவர் தேவை. நல்ல மனிதர்களிடம் மனம் மாறும்படியாகக் கேட்பதற்கு நான் வரவில்லை. தீயவர்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ளும்படியாகக் கேட்பதற்கே நான் வந்திருக்கிறேன்” என்று பதிலுரைத்தார். அவர்கள் இயேசுவிடம், “யோவானின் சீஷர்கள் அடிக்கடி உபவாசிக்கவும், பிரார்த்திக்கவும் செய்கிறார்கள். பரிசேயர்களின் சீஷர்களும் அதே மாதிரி செய்கிறார்கள். ஆனால் உங்கள் சீஷர்கள் எப்போதும் உண்பதும், குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள். இயேசு அவர்களிடம், “திருமணத்தின்போது மணமகன் உடனிருக்கையில் மணமகனின் நண்பர்களை உண்ணாதிருக்கும்படியாகக் கூற முடியாது. ஆனால் அவர்களை விட்டு மணமகன் பிரிந்து செல்லும் காலம் வரும். அப்போது அவனது நண்பர்கள் உபவாசம் இருப்பர்” என்றார். அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை. மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும். மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள். பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:27-39