லூக்கா 23:27-38
லூக்கா 23:27-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
லூக்கா 23:27-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். இயேசு அவர்களைத் திரும்பிப்பார்த்து, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழவேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள். ஏனெனில், ‘மலடியாய் இருக்கிற பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; குழந்தையைப் பிரசவிக்காதவர்களும், குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும். “ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’ என்றும் சொல்வார்கள். ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இவர்கள் இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்யமாட்டார்கள்?” என்றார். குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள். அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவருடைய கிறிஸ்துவாய் இருந்தால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும்” என்று சொல்லி, ஏளனம் செய்தார்கள். படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள். அவருக்கு மேலாக ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது, அதில் இப்படி எழுதியிருந்தது. இவர் யூதருடைய அரசன்.
லூக்கா 23:27-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள். இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார். குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
லூக்கா 23:27-38 பரிசுத்த பைபிள் (TAERV)
பலரும் இயேசுவைத் தொடர்ந்தனர். சில பெண்கள் வருந்தி அழுதனர். அவர்கள் இயேசுவுக்காகக் கவலைப்பட்டனர். ஆனால் இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள். ஏனெனில் பிள்ளைகளைப் பெற முடியாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் பிள்ளைகள் இல்லாத பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் பேசப்போகும் காலம் வரும். அப்போது மக்கள் மலையை நோக்கி, ‘எங்கள் மேல் விழு’ என்பார்கள். சிறு குன்றுகளை நோக்கி, ‘எங்களை மறைத்துக்கொள்’ என்று சொல்லத் தொடங்குவார்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்?” என்றார். கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் இயேசுவோடு வழி நடத்திச்செல்லப்பட்டார்கள். இயேசுவும், அக்குற்றவாளிகளும் “கபாலம்” என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தார்கள். ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு, “தந்தையே, என்னைக் கொல்கிற இந்த மக்களை மன்னித்தருளுங்கள். அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்” என்றார். இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். இயேசுவைப் பார்த்தபடி மக்கள் நின்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர். அவர்கள், “தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்து என்றால் அவனே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும். அவன் பிற மக்களைக் காப்பாற்றவில்லையா?” என்றார்கள். வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். வீரர்கள், “நீ யூதர்களின் ராஜாவானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் ராஜா” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.