லூக் 23:27-38

லூக் 23:27-38 IRVTAM

திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள். இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார். குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள். இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.