லூக்கா 22:7-39

லூக்கா 22:7-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடப்படும் நாளான புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், பஸ்காவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தை செய்யவேண்டும் என நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து போங்கள். வீட்டின் சொந்தக்காரனிடம், ‘எனது சீடர்களுடன் நான் பஸ்காவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கிறது என்று, போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள். அவன் உங்களுக்கு வசதி உள்ள ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுப்போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பந்தியில் உட்கார்ந்தார்கள். இயேசு அவர்களிடம், “நான் வேதனை அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்காவைச் சாப்பிடுவதற்கு ஆவலுடன் வாஞ்சையாய் இருக்கிறேன். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிடமாட்டேன்” என்றார். பாத்திரத்தை எடுத்த பின்பு, அவர் நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசு வரும்வரைக்கும் திராட்சைப்பழ இரசத்தை இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், உங்களுக்காக ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. ஆனாலும், என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனின் கையோ, சாப்பாட்டுப் பந்தியிலே என் கையுடனேயே இருக்கிறது. நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மானிடமகனாகிய நான் போகவேண்டும். ஆனால் என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ!” என்றார். அவர்களோ, தங்களுக்குள்ளே “இதைச் செய்கிறவன் யாராயிருக்கும்?” என்று, தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது. அப்பொழுது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள், தாங்கள் கொடைவள்ளல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்கிறவன், சிறியவனைப்போல் இருக்கவேண்டும். ஆளுகை செய்கிறவனோ, பணிவிடை செய்கிறவனைப்போல் இருக்கவேண்டும். பந்தியில் உட்கார்ந்திருப்பவனா, அல்லது அதில் பணிசெய்கிறவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணிசெய்கிறவனைப்போல் இருக்கிறேன். நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள். என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன். இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, பந்தியில் சாப்பிட்டுக் குடிப்பீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள். “சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார். அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “அதுபோதும்” என்றார். வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

லூக்கா 22:7-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய், அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார். பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார். அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.

லூக்கா 22:7-40 பரிசுத்த பைபிள் (TAERV)

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார். பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார். எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள். பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார். பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார். பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார். அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார். இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்” என்றார். அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள். பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் ராஜாக்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன். “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள். “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார். ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான். ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார். பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார். சீஷர்கள், “இல்லை” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். வேதவாக்கியம் சொல்கிறது, “‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார். இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

லூக்கா 22:7-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப்போனார்கள்.