லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:7-40

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:7-40 TAERV

புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார். பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார். எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள். பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார். பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார். பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார். அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார். இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்” என்றார். அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள். பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் ராஜாக்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன். “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள். “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார். ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான். ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார். பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார். சீஷர்கள், “இல்லை” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். வேதவாக்கியம் சொல்கிறது, “‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார். இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:7-40 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்