லூக்கா 22:31-53

லூக்கா 22:31-53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப்போனார்கள். அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரைபண்ணுகிறதைக் கண்டு: நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.

லூக்கா 22:31-53 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார். அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “அதுபோதும்” என்றார். வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்” என்றார். இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான். அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது. இயேசு மன்றாட்டிலிருந்து எழுந்து, தமது சீடர்களிடம் மீண்டும் சென்றார். அப்பொழுது சீடர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதை அவர் கண்டார். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார். இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார். இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது. ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார். அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார்.

லூக்கா 22:31-53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள். அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி, அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான். அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது. அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு: நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார். அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான். இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான். அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார். பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.

லூக்கா 22:31-53 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார். ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான். ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார். பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார். சீஷர்கள், “இல்லை” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். வேதவாக்கியம் சொல்கிறது, “‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார். இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: “பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார். இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான். இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.