லூக்கா 22:31-53

லூக்கா 22:31-53 TCV

“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார். அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “அதுபோதும்” என்றார். வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்” என்றார். இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான். அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது. இயேசு மன்றாட்டிலிருந்து எழுந்து, தமது சீடர்களிடம் மீண்டும் சென்றார். அப்பொழுது சீடர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதை அவர் கண்டார். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார். இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார். இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது. ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார். அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார்.