லூக்கா 18:24-43

லூக்கா 18:24-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார். சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான். முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார். உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.

லூக்கா 18:24-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

லூக்கா 18:24-43 பரிசுத்த பைபிள் (TAERV)

அவன் வருத்தமடைந்ததை இயேசு கண்டபோது அவர், “செல்வந்தர் தேவனின் இராஜ்யத்தில் நுழைவது மிகவும் கடினமானது! ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது, செல்வந்தன் தேவனின் இராஜ்யத்தினுள் நுழைவதைக் காட்டிலும் எளிதாக இருக்கும்!” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்றார்கள். பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார். பேதுரு “ஆண்டவரே, எங்களுக்குரிய அனைத்தையும் விட்டு உங்களைப் பின்பற்றினோமே” என்றான். இயேசு, “நான் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். வீடு, மனைவி, சகோதரர்கள், பெற்றோர் அல்லது குழந்தைகளை தேவனின் இராஜ்யத்துக்காகத் துறந்த ஒவ்வொருவனும் தான் விட்டவற்றைக் காட்டிலும் மிகுதியாகப் பெற்றுக்கொள்வான். இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெறுவான். அவன் இறந்த பின்னரும் தேவனோடு நித்தியமாக வாழ்வான்” என்றார். பின்னர், இயேசு பன்னிரண்டு சீஷர்களிடம் மட்டும் தனித்துப் பேசினார். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நாம் எருசலேமுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். மனிதகுமாரனைக் குறித்து எழுதும்படியாக தேவன் தீர்க்கதரிசிகளுக்குக் கூறிய அனைத்தும் நிறைவேறும். அவரது மக்களே அவருக்கு எதிராகத் திரும்பி அவரை யூதரல்லாத மக்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவர் மீது உமிழ்வார்கள். அவரை இகழ்ந்து அவமானப்படுத்துவார்கள். அவரைச் சாட்டையினால் அடித்து பின்னர் கொல்வார்கள். ஆனால் அவர் இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிரோடு மீண்டும் எழுவார்” என்றார். சீஷர்கள் இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பொருள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். மக்கள் பாதையைக் கடந்து வருவதைக் கேட்டதும் அம்மனிதன், “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” எனக் கேட்டான். மக்கள் அவனுக்கு, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள். குருடன் பரவசமுற்று, “இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். அக்கூட்டத்திற்கு முன்னால் நடந்து கொண்டிருந்த மக்கள் அக்குருடனை அதட்டினார்கள். அவனைப் பேசாதிருக்கும்படியாகக் கூறினார்கள். ஆனால் அக்குருடன் இன்னும் அதிகமாகச் சத்தமிட்டவாறே, “தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்றான். இயேசு, “அந்தக் குருடனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னபடி அங்கேயே நின்றுவிட்டார். அக்குருடன் அருகே வந்தபோது இயேசு அவனை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?” என்று கேட்டார். குருடன், “ஐயா, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான். இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார். அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.

லூக்கா 18:24-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.