லூக்கா 18:24-43

லூக்கா 18:24-43 TCV

இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார். அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான். அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார். சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான். முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான். இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார். உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.