லூக்கா 18:1-17
லூக்கா 18:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 18:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள். “கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட, இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார். பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்! அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார். தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல. நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான். “ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள். இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
லூக்கா 18:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 18:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)
சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்: “ஓர் ஊரில் ஒரு நியாயாதிபதி இருந்தான். அவன் தேவனைக் குறித்துக் கவலைப்படவில்லை. மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அவன் அக்கறையற்றவனாக இருந்தான். அதே ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவள் கணவன் இறந்து போனான். அந்தப் பெண் பல முறை நியாயாதிபதியிடம் வந்து, ‘எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்’ என்றாள். அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான். “தீய நியாயாதிபதி கூறியதைக் கவனமுடன் கேளுங்கள். தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார். தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான். “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.” இயேசு தொடுமாறு சிலர் தங்கள் சிறு குழந்தைகளை இயேசுவின் அருகில் கொண்டு வந்தார்கள். ஆனால் சீஷர்கள் இதைப் பார்த்ததும் மக்களை அதட்டித் தடுத்தார்கள். ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.