அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
“கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட, இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார்.
பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்! அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார்.
தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல. நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
“ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான்.
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள். இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.