லூக்கா 17:11-37

லூக்கா 17:11-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான். அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

லூக்கா 17:11-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான். அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார். பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார். ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை. ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” என்றார். பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள். ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன். ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும். நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது. “லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது. “மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும். அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது. லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” என்றார். அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.

லூக்கா 17:11-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார். அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, குஷ்டரோகமுள்ள மனிதர்கள் பத்துபேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தமாக தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் சமாரியனாக இருந்தான். அப்பொழுது இயேசு: சுகமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனைத்தவிர மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர்கள் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் மறுமொழியாக: தேவனுடைய ராஜ்யம் கண்களுக்குத் தெரியும்படியாக வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவாக இருக்காது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கி: மனிதகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடம் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுகள்பட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாக இருக்கிறது. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரை மக்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; மக்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லோரையும் அழித்துப்போட்டது. மனிதகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கவேண்டும்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கவேண்டும். லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான். அந்த இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். மாவரைக்கிற இரண்டு பெண்களில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

லூக்கா 17:11-37 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு எருசலேமுக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். கலிலேயாவைக் கடந்து அவர் சமாரியாவுக்குப் போனார். அவர் ஒரு சிற்றூருக்கு வந்தார். பத்து மனிதர்கள் அவரை அங்கு சந்தித்தார்கள். அவர்கள் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களாதலால் அவர் அருகே வரவில்லை. ஆனால் அம்மனிதர்கள் இயேசுவை நோக்கி, உரக்கக் கூவி, “இயேசுவே! குருவே! தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்கள். அம்மனிதர்களைப் பார்த்தபோது இயேசு, “போய் ஆசாரியர் முன்பு உங்களை நீங்களே காட்டுங்கள்” என்றார். அந்தப் பத்து மனிதர்களும் ஆசாரியரிடம் போய்கொண்டிருக்கையில் அவர்கள் குணமடைந்தார்கள். அவர்களில் ஒருவன் தான் சுகம் பெற்றதைக் கண்டபோது இயேசுவிடம் திரும்பிச் சென்றான். அவன் உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்தான். அந்த மனிதன் இயேசுவுக்கு நன்றி கூறினான். (இந்த மனிதன் ஒரு சமாரியன். யூதன் அல்லன்) இயேசு, “பத்து மனிதர்கள் நலமடைந்தனர். மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனுக்கு நன்றி சொல்லுவதற்குத் திரும்பி வந்தவன் இந்த சமாரியன் மட்டும் தானா?” என்று கேட்டார். பின்பு இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, நீ போகலாம். நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார். பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள். இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார். பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது. “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும். “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. லோத்தின் மனைவிக்கு என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்! “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.