லூக்கா 16:1-9

லூக்கா 16:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கையொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

லூக்கா 16:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான். “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான். “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான். “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “ ‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான். “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

லூக்கா 16:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான். அப்பொழுது அந்த நிர்வாகி: நான் என்ன செய்வேன், என் எஜமான் நிர்வாக பொறுப்பிலிருந்து என்னை நீக்கிப்போடுகிறானே நிலத்தை பண்படுத்துவதற்கும்; எனக்குப் பெலனில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கப்படுகிறேன். நிர்வாகப் பொறுப்பைவிட்டு நான் நீக்கப்படும்போது, என்னைத் தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளுவார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது நிர்வாகி அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாக எழுது என்றான். பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள்.

லூக்கா 16:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான். “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான். “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான். “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான். “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய்.