லூக்கா 16:1-9

லூக்கா 16:1-9 TCV

இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான். “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது. இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான். “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான். “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “ ‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான். “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.