லூக்கா 14:1-24

லூக்கா 14:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, சாப்பிடுவதற்கு இயேசு போயிருந்தார். எல்லோரும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான். இயேசு பரிசேயரையும் மோசேயின் சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது மோசேயின் சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார். அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே, இயேசு அவன் கையை பிடித்து குணமாக்கி அனுப்பிவிட்டார். அப்பொழுது இயேசு அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், உடனே நீங்கள் அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிடமாட்டீர்களா?” என்று கேட்டார். அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்: “யாராவது உங்களை திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம். எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை, இவருக்குக் கொடு’ என்று உனக்குச் சொல்லக்கூடும். அப்பொழுது நீ வெட்கமடைந்தவனாய், கடைசி இடத்திற்கு போய் உட்கார நேரிடும். ஆகவே, உங்களை யாராவது அழைக்கும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவன் உன்னிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீ மதிப்பைப் பெறுவாய். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார். பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மத்தியான உணவையோ, இரவு உணவையோ கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்கவேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய், அவர்கள் உனக்குப் பதில் உதவி செய்துவிடுவார்கள். எனவே, நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக; அப்பொழுது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால், அதற்கான பதில் உதவி எதையும் உனக்குச் செய்யமுடியாது. ஆனால், நீ நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அதற்கான பதில் உதவியைப் பெற்றுக்கொள்வாய்” என்றார். இதைக் கேட்டபோது, இயேசுவோடு பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் சாப்பிடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான். இயேசு அதற்கு மறுமொழியாக சொன்னதாவது: “ஒருவன் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, பல விருந்தினர்களை அழைத்திருந்தான். விருந்துக்கான வேளை வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி தனது வேலைக்காரனை அனுப்பினான். “ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்பொழுதுதான் நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான். “வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான். “மற்றவனோ, ‘நான் இப்பொழுதுதான் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என்னால் வரமுடியாது’ என்றான். “அந்த வேலைக்காரன் திரும்பிவந்து, தனது எஜமானுக்கு நடந்தவற்றைச் சொன்னான். அப்பொழுது, அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப்போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சந்துகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் கூட்டிக்கொண்டு வா’ என உத்தரவிட்டான். “அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால், இன்னும் இடம் இருக்கிறது’ என்றான். “அப்பொழுது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப்போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும். நான் உனக்குச் சொல்கிறேன், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் எனது விருந்தை சுவைக்கமாட்டான்’ என்றான்.”

லூக்கா 14:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள். இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார். அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார். அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான். அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான். வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.

லூக்கா 14:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கொடிய நோய் உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள். இயேசு பரிசேயரிடமும், வேதபாரகரிடமும், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா அல்லது தவறா?” என்று கேட்டார். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார். பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார். இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை. விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார். “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும். நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும். “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள். தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார். பின்பு இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும். அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள். அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார். இயேசுவுடன் மேசையருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் இவற்றைக் கேட்டான். அவன் இயேசுவிடம், “தேவனின் இராஜ்யத்தில் உணவை அருந்தும் மக்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பார்கள்” என்றான். இயேசு அவனை நோக்கி, “ஒரு மனிதன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். பலரையும் அவ்விருந்துக்கு அழைத்தான். சாப்பிடும் வேளை நெருங்கியதும் அவன் வேலைக்காரனை விருந்தினர்களிடம் அனுப்பி, ‘வாருங்கள்! உணவு தயாராக இருக்கிறது’ என்று சொல்லுமாறு அனுப்பினான். ஆனால் அந்த விருந்தினர்கள் எல்லாம் தம்மால் வர இயலாது எனச் சொல்லி அனுப்பினார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாக்குப்போக்கு கூறினார்கள். முதலாமவன், ‘நான் ஒரு வயலை வாங்கியுள்ளேன். அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்’ என்றான். இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான். மூன்றாமவன், ‘எனக்கு இப்பொழுதுதான் திருமணமாயிற்று. நான் வர முடியாது’ என்றான். “எனவே வேலைக்காரன் திரும்பி வந்தான். நடந்தவற்றை எஜமானருக்குக் கூறினான். எஜமானர் சினந்து, தன் வேலைக்காரனிடம், ‘விரைந்து செல். தெருக்களிலும், ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் இருக்கிற ஏழைகளையும், அங்கவீனர்களையும், குருடரையும், முடவர்களையும் அழைத்து வா’ என்றான். “பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான். எஜமானன் வேலைக்காரனை நோக்கி, ‘பெரும் பாதைகள் அருகேயும் கிராமப்புறத்திற்கும் செல். அங்குள்ள மக்களை வருமாறு சொல். எனது வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினான். மேலும் ‘நான் முதலில் அழைத்தவர்களில் ஒருவர் கூட என்னோடு விருந்துண்ணப் போவதில்லை’ என்றான்” எனக் கூறினார்.

லூக்கா 14:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவதுபண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார். அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.