லூக் 14:1-24

லூக் 14:1-24 IRVTAM

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள். இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார். அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார். அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான். அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான். வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா; அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.