லூக்கா 12:1-34
லூக்கா 12:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய்விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத்தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
லூக்கா 12:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள். மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும். “என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது. “நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள். ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார். கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார். பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார். மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். “பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து. பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான். “அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார். “தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார். பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது. ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது. காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே! கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்? இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? “காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை. விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார். விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள். ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார். எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும். “சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார். உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை. ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
லூக்கா 12:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும். என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள். நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை. உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான். எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள். நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார். தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார். உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை. உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
லூக்கா 12:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார். பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே. “பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது. “நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன். “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான். “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார். கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான். ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார். பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான். “பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான். “ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார். “தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு. இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்? “காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க ராஜாவாகிய சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள். “எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.” “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”