பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி வந்தார்கள். ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்குத் திரளான மக்கள் குழுமினர். மக்களிடம் பேசும் முன்பு இயேசு தம் சீஷர்களை நோக்கி, “பரிசேயரின் புளிப்பைக் (தீய தொடர்பை) குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் வேஷதாரிகள். மறைக்கப்பட்ட அனைத்தும் வெளிப்படும். இரகசியங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும். இருளில் கூறுகின்ற செயல்கள் ஒளியில் தெரிவிக்கப்படும். இரகசியமாக அறையில் முணுமுணுக்கிற செய்திகள் வீட்டின் மேலிருந்து உரக்கத் தெரிவிக்கப்படும்” என்றார்.
பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.
“பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.
“நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.
“மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.
“ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.
கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் இயேசுவை நோக்கி, “போதகரே, எங்கள் தந்தை இறந்து போனார். தந்தையின் உடைமையை என்னோடு பங்கிட என் தம்பிக்குச் சொல்லுங்கள்” என்றான்.
ஆனால் இயேசு அவனை நோக்கி, “உங்கள் நடுவில் நியாயாதிபதியாக நான் இருக்க வேண்டும் என்றோ அல்லது உங்கள் தந்தையின் பொருட்களை உங்களுக்கு நான் பிரித்துத் தர வேண்டும் என்றோ யார் கூறியது?” என்று கேட்டார். பின்னர் இயேசு அவர்களை நோக்கி, “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்றார்.
பின்பு இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “நிலத்தின் சொந்தக்காரனான ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அச்செல்வந்தன் தனக்குள், ‘நான் என்ன செய்வேன்? விளைச்சலை எல்லாம் வைப்பதற்கு இடம் இல்லையே’ என்று எண்ணினான்.
“பின்பு அச்செல்வந்தன், ‘நான் செய்ய வேண்டியதை அறிவேன். எனது களஞ்சியங்களை இடித்துவிட்டு பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன். அவற்றில் கோதுமையையும், நல்ல பொருட்களையும் நிரப்பி வைப்பேன். அப்போது நான் எனக்குள், என்னிடம் மிகுதியான அளவில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கான பொருட்களைச் சேமித்துள்ளேன். ஓய்வுகொள், உண், குடி, வாழ்க்கையை அனுபவி என்று கூறுவேன்’ என்றான்.
“ஆனால் தேவன் அவனை நோக்கி, ‘மூடனே! இன்று இரவில் நீ மரிப்பாய். உனக்காக வைத்துள்ள பொருட்கள் என்ன ஆகும்? அப்போது அப்பொருட்களைப் பெறுவது யார்?’ என்றார்.
“தனக்காகவே மட்டும் பொருட்களைச் சேர்க்கின்ற மனிதனின் நிலை இத்தகையது. தேவனுடைய பார்வையில் அம்மனிதன் செல்வந்தன் அல்லன்” என்றார் இயேசு.
இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். உணவைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியமானது. உடைகளைக் காட்டிலும் சரீரம் மிகவும் முக்கியமானது. பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதோ, அறுப்பதோ இல்லை. பறவைகள் வீடுகளிலோ, களஞ்சியங்களிலோ உணவைச் சேமிப்பதுமில்லை. ஆனால் தேவன் அவற்றைப் பாதுகாக்கிறார். நீங்களோ பறவைகளைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். கவலைப்படுவதால் உங்களில் ஒருவனும் உங்கள் வாழ்வின் அளவை நீடிக்க வைக்க முடியாது. சிறிய காரியங்களை உங்களால் செய்ய முடியாவிட்டால் பெரிய காரியங்களைக் குறித்துக் கவலைப்படுவானேன்?
“காட்டுப் பூக்களைப் பாருங்கள். அவை வளர்வதைக் கவனியுங்கள். அவை தமக்காக உழைப்பதோ, துணிகளை நெய்வதோ கிடையாது. ஆனால் பெரிய செல்வம் மிக்க ராஜாவாகிய சாலமோன் கூட அப்பூக்களில் ஒன்றைப்போல அழகாக உடுத்தியதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். வயலிலுள்ள புல்லுக்கும் தேவன் அத்தகைய ஆடையை அணிவிக்கிறார். இன்று அந்தப் புல் உயிர் வாழும். நாளையோ எரிப்பதற்காகத் தீயில் வீசப்படும். எனவே தேவன் இன்னும் அதிகமாக உங்களுக்கு உடுத்துவிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். நம்பிக்கையில் குறைவுபடாதீர்கள்.
“எதை உண்போம், எதைக் குடிப்போம், என்பதைக் குறித்து எப்போதும் எண்ணாதீர்கள். அதைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். இவ்வுலக மக்கள் அனைவரும் அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவை உங்களுக்குத் தேவை என உங்கள் தந்தைக்குத் தெரியும். நீங்கள் விரும்பும் காரியம் தேவனுடைய இராஜ்யமாக இருக்க வேண்டும். அப்போது (உங்களுக்குத் தேவையான) மற்ற எல்லாப் பொருட்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.”
“சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்க விரும்புகிறார். உங்களிடமிருக்கும் பொருட்களை விற்று, அப்பணத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள். இந்த உலகத்தின் செல்வங்கள் நிலைத்திருப்பதில்லை. பரலோகத்தின் பொக்கிஷத்தைப் பெறுங்கள். அந்தப் பொக்கிஷம் என்றும் நிலைத்து நிற்கும். திருடர்கள் பரலோகத்தில் உள்ள பொக்கிஷத்தைத் திருட முடியாது. பூச்சிகள் அதை அழிக்கமுடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.”