லேவியராகமம் 8:7-36

லேவியராகமம் 8:7-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக்கட்டி, அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து, அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைத் கட்டினான். பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி, அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி, அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான். பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத் தரித்து, பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து, காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான். பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். ஆட்டுக்கடா சந்துசந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான். குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான். பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான். பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, கொழுப்பையும், வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின் மேலும் வைத்து, அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது. பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று. மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும், அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து, மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து, பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள். இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான். கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

லேவியராகமம் 8:7-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் ஆரோனுக்கு உள்ளுடையை உடுத்தி, இடுப்பில் இடைப்பட்டியைக் கட்டி, மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் போட்டான். திறமையாக, அழகாகப் பின்னப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டினான். இவ்வாறாக, அது அவன்மேல் கட்டப்பட்டது. பின்பு மார்பு அணியை அவனுக்குப் போட்டு, அந்த மார்பு அணியிலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்தான். பின்பு அவன் தலைப்பாகையை ஆரோனின் தலையில் வைத்து, அதன் முன்பக்கத்தில் பரிசுத்த மகுடமான தங்கப்பட்டியை வைத்தான். இவற்றை யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் செய்தான். பின்பு மோசே, அபிஷேக எண்ணெயை எடுத்து இறைசமுகக் கூடாரத்தையும், அதனுள் இருந்த எல்லாவற்றையும் அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அந்த எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும், அதிலுள்ள பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் காலையும் அர்ப்பணிக்கும்படி அபிஷேகித்தான். பின்பு ஆரோனின் தலையில் அபிஷேக எண்ணெயை ஊற்றி, அவனை அர்ப்பணம் செய்வதற்காக அபிஷேகித்தான். மோசே ஆரோனின் மகன்களை முன்னால் கொண்டுவந்து, உள்ளுடையை உடுத்தி, இடைப்பட்டியைக் கட்டி, குல்லாக்களையும் அணிவித்தான். இவற்றை மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான். அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக, ஒரு காளையை அவன் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தார்கள். மோசே அந்தக் காளையை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலில் தொட்டு, பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான். இவ்விதமாக பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்தான். மேலும் மோசே, உள்ளுறுப்புகளைச் சுற்றியிருந்த கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியிருந்த கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதில் இருந்த கொழுப்பையும் எடுத்து அவற்றைப் பலிபீடத்தின்மேல் எரித்தான். ஆனால் மோசே வெட்டப்பட்ட காளையை தோலுடனும், அதன் இறைச்சியுடனும், அதன் குடல்களுடனும் முகாமுக்கு வெளியே எரித்தான். இவற்றை யெகோவா கட்டளையிட்டபடியே செய்தான். அதன்பின், தகன காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அந்தக்கடா கொல்லப்பட்டது, மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். மோசே அந்தக்கடாவை துண்டங்களாக வெட்டி தலையையும், துண்டங்களையும் கொழுப்பையும் எரித்தான். அவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரினால் கழுவி, முழு கடாவையும் பலிபீடத்தின்மேல் தகன காணிக்கையாக எரித்தான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் எரிக்கப்படும் ஒரு காணிக்கையாக இருந்தது. இவற்றை மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான். பின்பு மோசே அர்ப்பணிப்புக்கான மற்ற செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள். மோசே அந்த செம்மறியாட்டுக் கடாவை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசினான். ஆரோனுடைய மகன்களையும் மோசே முன்பாக அழைத்துவந்து, இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து அவர்களின் வலது காது மடல்களிலும், வலதுகை பெருவிரல்களிலும், வலதுகால் பெருவிரல்களிலும் பூசினான். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான். மோசே கொழுப்பையும், கொழுத்த வாலையும், உள்ளுறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது தொடையையும் எடுத்தான். பின்பு அவன் யெகோவா முன்வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து, ஒரு அடை அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துச் சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்து, அக்கொழுப்புகளின்மேலும், வலது தொடையின்மேலும் வைத்தான். அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்களின் கைகளிலும் கொடுத்து யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். மோசே அவைகளை அவர்களின் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தில் இருந்த காணிக்கையின்மேல் அதை அர்ப்பணிப்பு காணிக்கையாக எரித்தான். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையாக இருந்தது. அர்ப்பணிப்பு காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவில், மோசே தன் பங்கான நெஞ்சுப்பகுதியை எடுத்து, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். இவற்றை யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான். பின்பு மோசே, அபிஷேக எண்ணெயில் கொஞ்சமும், பலிபீடத்திலிருந்து சிறிது இரத்தத்தையும் எடுத்து, ஆரோனின்மேலும், அவன் உடையின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளித்தான். இவ்வாறு ஆரோனையும், அவனுடைய உடைகளையும், அவன் மகன்களையும், அவர்களுடைய உடைகளையும் அர்ப்பணம் செய்தான். பின்பு மோசே, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொன்னதாவது, “ஆரோனும், அவன் மகன்களும் சாப்பிடவேண்டும் என நான் கட்டளையிட்டபடி நீங்கள் இறைச்சியைச் சபைக்கூடார வாசலில் சமைத்து, அங்கே அர்ப்பணிப்பு காணிக்கை கூடையிலுள்ள அப்பத்துடன் சாப்பிடவேண்டும். மீதமுள்ள இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிடவேண்டும். உங்கள் அர்ப்பணிப்பு நாட்கள் முடியும்வரை ஏழுநாட்களுக்கு சபைக்கூடார வாசலைவிட்டுப் போகாதீர்கள். ஏனென்றால், உங்கள் நியமனம் ஏழு நாட்கள்வரை நீடிக்கும். இன்று செய்யப்பட்டிருப்பது உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி யெகோவாவினால் கட்டளையிடப்பட்டதாகும். நீங்கள் இந்த ஏழுநாட்களும் இரவும் பகலும் சபைக்கூடார வாசலில் தங்கியிருந்து, யெகோவா கேட்டுக்கொள்கிறபடி செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் சாகமாட்டீர்கள். ஏனெனில், இதுதான் எனக்குக் கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.” இப்படியாக யெகோவா மோசேயின் மூலம் கட்டளையிட்ட அனைத்தையும் ஆரோனும் அவன் மகன்களும் செய்தார்கள்.

லேவியராகமம் 8:7-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவனுக்கு உள் அங்கியைப் போட்டு, இடுப்புக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தை அணிவித்து, அதின்மேல் ஏபோத்தின் விசேஷமான கச்சையைக்கட்டி, அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவித்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்து, அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான். பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி, அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்து, அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றி அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்தான். பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களை அணிவித்து, பாவநிவாரணபலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்; அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காக சுத்திகரிப்புசெய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதைப் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து, காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான். பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். ஆட்டுக்கடா துண்டுதுண்டாக வெட்டப்பட்டது; யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தான். குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் யெகோவாவுடைய நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான். பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள். பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான். பின்பு ஆரோனுடைய மகன்களையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லாத அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லாத அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து, அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் மகன்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் எரித்தான்; அவைகள் நறுமண வாசனையான பிரதிஷ்டை பலிகள்; இது யெகோவாவுக்குத் தகனபலியானது. பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது. மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நோக்கி: “நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வேகவைத்து, ஆரோனும் அவனுடைய மகன்களும், அதைச் சாப்பிடுவார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் சாப்பிட்டு, மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து, பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள். இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டார். நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து யெகோவாவுடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன்” என்றான். யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.

லேவியராகமம் 8:7-36 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் நெய்யப்பட்ட உள்ளங்கியை ஆரோனுக்கு அணிவித்து, இடுப்பைச் சுற்றிக் கச்சையையும் கட்டினான். பிறகு அவன் மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் அணிவித்தான். அதன்மேல் ஏபோத்தின் அழகான கச்சையைக் கட்டினான். பிறகு ஆரோனுக்கு நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும், அதின் பையில் ஊரீம் தும்மீம் என்பவற்றையும் வைத்தான். மோசே ஆரோனின் தலையில் தலைப்பாகையைக் கட்டி, அதன் முன் பக்கத்தில் பொற்பட்டத்தைக் கட்டினான். அது பரிசுத்த கிரீடமாக விளங்கியது. மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான். பிறகு மோசே அபிஷேக எண்ணெயை எடுத்து பரிசுத்த கூடாரத்திற்குள்ளும் கூடாரத்திற்குள் இருந்த எல்லாப் பொருட்கள் மேலும் தெளித்தான். இவ்வாறு அனைத்தையும் மோசே பரிசுத்தமாக்கினான். பிறகு மோசே சிறிதளவு அபிஷேக எண்ணெயை ஏழு முறை பலிபீடத்தின் மேல் தெளித்தான். அவன் பலிபீடத்தையும் அபிஷேக எண்ணெயால் பரிசுத்தப்படுத்தினான். பின் கிண்ணத்திலும் அதன் அடிப்பாகத்திலும் அபிஷேக எண்ணெயைத் தெளித்தான். இவ்வாறு மோசே கருவிகளையும் பாத்திரங்கள் அனைத்தையும் பரிசுத்தப்படுத்தினான். பிறகு மோசே அபிஷேக எண்ணெயில் சிறிதளவு எடுத்து ஆரோனின் தலையில் ஊற்றி அவனையும் பரிசுத்தமாக்கினான். பின்னர் மோசே ஆரோனின் குமாரர்களையும் அழைத்து அவர்களுக்கும் நெய்யப்பட்ட அங்கியை அணிவித்து, இடுப்புக் கச்சையைக் கட்டினான். பின் அவர்களின் தலையில் தலைப்பாகைகளை அணிவித்தான். மோசே இவற்றையெல்லாம் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தான். பிறகு மோசே பாவப்பரிகார பலிக்கான காளையைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது குமாரர்களும் தங்கள் கைகளை அப்பாவப் பரிகார பலியான காளையின் தலை மீது வைத்தார்கள். பின் மோசே அக்காளையைக் கொன்று அதன் இரத்தத்தை சேகரித்தான். அவன் தன் விரல்களில் இரத்தத்தைத் தொட்டு பலிபீடத்தின் மூலைகளில் பூசினான். இந்த முறையில் மோசே பலிபீடத்தைப் பலியிடுவதற்குரியதாகத் தயார்படுத்தினான். பின் பலிபீடத்தின் அடியில் அந்த இரத்தத்தை ஊற்றினான். அம்முறையில் அவன் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த பலிபீடத்தைத் தயார் செய்தான். காளையின் உட்பகுதியிலுள்ள கொழுப்பையெல்லாம் வெளியே எடுத்தான். பின் குடல்களின் மேலிருந்து கொழுப்பையும், கல்லீரல்மேலிருந்து ஜவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் வெளியே எடுத்து, அவற்றை பலிபீடத்தின்மேல் எரித்தான். ஆனால் மோசே அக்காளையின் தோலையும் இறைச்சியையும் உடல் கழிவுகளையும் கூடாரத்திற்கு வெளியே கொண்டு போய் அவைகளை எரித்தான். மோசே தனக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தையும் செய்து முடித்தான். பிறகு மோசே தகன பலிக்கான ஆட்டுக் கடாவைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது குமாரர்களும் செம்மறி ஆட்டுக் கடாவின் தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். பிறகு அதனை மோசே கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். பின்னர் அந்த ஆட்டைப் பல துண்டுகளாக வெட்டினான். அதன் உள்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவினான். பின்னர் அனைத்தையும் பலிபீடத்தின் மீது குவித்து வைத்து எரித்தான். இது கர்த்தருக்கு செய்யப்படும் சர்வாங்க தகனபலியாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே அனைத்தையும் செய்து முடித்தான். பிறகு மோசே இன்னொரு ஆட்டுக் கடாவையும் கொண்டு வந்தான். இது ஆரோனையும் அவனது குமாரர்களையும் ஆசாரியர்களாக நியமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆரோனும் அவனது குமாரர்களும் தங்கள் கைகளை செம்மறி ஆட்டுக்கடாவின் தலையில் வைத்தனர். பிறகு மோசே அதனைக் கொன்றான். அவன் அதன் இரத்தத்தைத் தொட்டு ஆரோனின் வலது காது முனையிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தேய்த்தான். பிறகு மோசே ஆரோனின் குமாரர்களை பலிபீடத்தின் அருகிலே அழைத்தான். மோசே அவர்களது வலது காதுகளின் முனையிலும், வலது கை பெருவிரல்களிலும், வலது கால் பெருவிரல்களிலும் அதன் இரத்தத்தைத் தேய்த்தான். பின்னர் இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் தெளித்தான். மோசே கொழுப்பையும், வாலையும், உட்பகுதி கொழுப்பையும், நுரையீரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறு நீரகங்களையும், அதன் மேல் உள்ள கொழுப்பையும், வலது கால் தொடையையும் எடுத்தான். கர்த்தரின் முன்பாகத் தினமும் வைக்கப்படும் புளிப்பில்லா அப்பக்கூடையிலிருந்து ஒரு புளிப்பான அப்பத்தையும், ஒரு எண்ணெய் கலந்த அப்பத்தையும், ஒரு மெல்லிய புளிப்பில்லா அடையையும் எடுத்தான். இவற்றை ஏற்கெனவே எடுத்த கொழுப்பின் மேலும் ஆட்டுத் தொடையின் மேலும் வைத்தான். பின்பு இவை எல்லாவற்றையும் எடுத்து ஆரோனின் கைகளிலும், அவனது குமாரர்களின் கைகளிலும் வைத்து அசைவாட்டும் பலியாக கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டினான். பின்பு அவற்றை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, அவற்றைப் பலிபீடத்தின் மேலுள்ள தகன பலிக்குரிய இடத்தில் போட்டு எரித்தான். இது ஆரோனையும் அவனது குமாரர்களையும் ஆசாரியர்களாக நியமித்ததற்கான பலியாகும். இது நெருப்பால் எரிக்கப்பட்ட காணிக்கையாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாகும். மோசே மார்க்கண்டத்தை எடுத்து கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். இது மோசே ஆசாரியர்களை நியமித்ததற்காக அவனது பங்காகும். மோசேக்கு கர்த்தர் இட்ட கட்டளையின்படியே இது இருந்தது. மோசே கொஞ்சம் அபிஷேக எண்ணெயையும் பலிபீடத்தில் உள்ள இரத்தத்தையும் எடுத்து, அவற்றை ஆரோனின் மேலும் அவனது ஆடைகளின் மேலும் தெளித்தான். பிறகு அவற்றை ஆரோனின் குமாரர்கள் மீதும் அவர்களின் ஆடைகள் மேலும் தெளித்தான். இவ்வாறு அவன் ஆரோன், அவனது குமாரர்கள், அவர்களின் ஆடைகள் அனைத்தையும் பரிசுத்தமாக்கினான். பிறகு மோசே ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும், “எனது கட்டளைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘ஆரோனும் அவனது குமாரர்களும் இவற்றை உண்ண வேண்டும்’ என்று சொன்னேன். எனவே அப்பக் கூடையையும் ஆசாரியர்களாக நியமித்தற்கான காணிக்கை இறைச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாசலிலேயே இறைச்சியை வேகவையுங்கள். அந்த இடத்திலேயே அப்பத்தையும் இறைச்சியையும் உண்ணுங்கள். நான் சொன்னபடியே செய்யுங்கள். அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள். ஆசாரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சடங்கு ஏழு நாட்கள் நடைபெறும். எனவே ஏழு நாட்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு விலகக் கூடாது. இன்று நடந்தவை அனைத்தும் கர்த்தரின் கட்டளையின்படி நடந்தவை. உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார். ஏழு நாட்களாக இரவும் பகலும் நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலேயே இருக்க வேண்டும். நீங்கள் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால் மரித்துப்போவீர்கள். கர்த்தர் எனக்கு இந்தக் கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்” என்றான். ஆரோனும் அவனுடைய குமாரர்களும் மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்து முடித்தனர்.