அவனுக்கு உள் அங்கியைப் போட்டு, இடுப்புக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தை அணிவித்து, அதின்மேல் ஏபோத்தின் விசேஷமான கச்சையைக்கட்டி, அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவித்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்து, அவன் தலையிலே தலைப்பாகையை அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான். பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள அனைத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்தி, அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்து, அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றி அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்தான். பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களை அணிவித்து, பாவநிவாரணபலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்; அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காக சுத்திகரிப்புசெய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதைப் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து, காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான். பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள். அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். ஆட்டுக்கடா துண்டுதுண்டாக வெட்டப்பட்டது; யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தான். குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் யெகோவாவுடைய நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான். பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள். பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான். பின்பு ஆரோனுடைய மகன்களையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லாத அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லாத அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து, அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் மகன்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி, பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் எரித்தான்; அவைகள் நறுமண வாசனையான பிரதிஷ்டை பலிகள்; இது யெகோவாவுக்குத் தகனபலியானது. பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது. மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான். பின்பு மோசே ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நோக்கி: “நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வேகவைத்து, ஆரோனும் அவனுடைய மகன்களும், அதைச் சாப்பிடுவார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் சாப்பிட்டு, மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து, பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள். இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டார். நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து யெகோவாவுடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன்” என்றான். யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.