லேவியராகமம் 23:1-8
லேவியராகமம் 23:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன: ஆறுநாளும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும். முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
லேவியராகமம் 23:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். “ ‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும். “ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும். அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும். முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.
லேவியராகமம் 23:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக அனுசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய யெகோவாவுடைய பண்டிகை நாட்களாவன: “ஆறுநாட்களும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் குடியிருப்புகளிலெல்லாம் யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாக இருப்பதாக. “சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய யெகோவாவின் பண்டிகைகளாவன: முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமாகிய வேளையிலே யெகோவாவின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, யெகோவாவுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையுமாக இருக்கும்; ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏழுநாட்களும் யெகோவாவுக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல்” என்றார்.
லேவியராகமம் 23:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: “ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும். “கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும். முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும். “அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும். பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார்.