லேவியராகமம் 23:1-8

லேவியராகமம் 23:1-8 TCV

யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். “ ‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும். “ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும். அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும். முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம். யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.