லேவியராகமம் 18:21-30

லேவியராகமம் 18:21-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“ ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா. “ ‘நீங்கள் ஒரு பெண்ணோடு பாலுறவு கொள்வதுபோல், ஆணோடு பாலுறவுகொள்ள வேண்டாம். அது அருவருப்பானது. “ ‘எந்தவொரு மிருகத்தோடும் நீங்கள் பாலுறவுகொண்டு அதினாலே உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் மிருகத்தோடு பாலுறவுகொள்ளும்படி, தன்னை ஒப்புவிக்கக் கூடாது. அது இயல்பிற்கு முரணான பாலுறவாகும். “ ‘இவ்வாறான தீயசெயல்களினால் உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகும் நாட்டினர் இவ்விதமாகவே அசுத்தமாகினார்கள். இவ்விதமாய் நாடும் அசுத்தப்பட்டது. எனவே அதன் பாவத்திற்காக நான் அதைத் தண்டித்தேன். நாடும் அதன் குடிகளை வாந்திபண்ணியது. ஆனால் நீங்களோ எனது சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். தன் நாட்டினனானாலும், உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனானாலும், யாரும் இந்த அருவருப்பான ஒன்றையும் செய்யக்கூடாது. ஏனெனில், உங்களுக்கு முன்னே இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தார்கள். நாடும் அசுத்தமடைந்தது. நாட்டை நீங்கள் அசுத்தப்படுத்தினால், உங்களுக்கு முன்னே அங்கே வாழ்ந்த நாட்டினரை அது வாந்திபண்ணியதுபோல, உங்களையும் அது வாந்திபண்ணிவிடும். “ ‘யாராவது இந்த அருவருப்பான செயல்களில் எதையாவது செய்தால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். ஆகவே நீங்கள் என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் வரும் முன்பு அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அருவருப்பான வழக்கங்களில் எதையாவது பின்பற்றி, அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.

லேவியராகமம் 18:21-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா. பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது. எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு. “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க, நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள். ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 18:21-30 பரிசுத்த பைபிள் (TAERV)

“நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர். “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும். “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது. “இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டையும் அருவருப்பாக்கிவிட்டார்கள். எனவே நான் இதன் பாவத்துக்காக இதனைத் தண்டிப்பேன். அந்நாடு அங்கு வாழ்பவர்களைக் கக்கிப்போடும். “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது. உங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அத்தகைய பாவங்களைச் செய்தார்கள். அதனால் நாடே அருவருப்பாயிற்று. நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும். எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள். மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.

லேவியராகமம் 18:21-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத்தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். இப்படிபட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள். ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.