லேவியராகமம் 18:21-30

லேவியராகமம் 18:21-30 TCV

“ ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா. “ ‘நீங்கள் ஒரு பெண்ணோடு பாலுறவு கொள்வதுபோல், ஆணோடு பாலுறவுகொள்ள வேண்டாம். அது அருவருப்பானது. “ ‘எந்தவொரு மிருகத்தோடும் நீங்கள் பாலுறவுகொண்டு அதினாலே உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் மிருகத்தோடு பாலுறவுகொள்ளும்படி, தன்னை ஒப்புவிக்கக் கூடாது. அது இயல்பிற்கு முரணான பாலுறவாகும். “ ‘இவ்வாறான தீயசெயல்களினால் உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகும் நாட்டினர் இவ்விதமாகவே அசுத்தமாகினார்கள். இவ்விதமாய் நாடும் அசுத்தப்பட்டது. எனவே அதன் பாவத்திற்காக நான் அதைத் தண்டித்தேன். நாடும் அதன் குடிகளை வாந்திபண்ணியது. ஆனால் நீங்களோ எனது சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். தன் நாட்டினனானாலும், உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனானாலும், யாரும் இந்த அருவருப்பான ஒன்றையும் செய்யக்கூடாது. ஏனெனில், உங்களுக்கு முன்னே இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் இந்தச் செயல்களையெல்லாம் செய்தார்கள். நாடும் அசுத்தமடைந்தது. நாட்டை நீங்கள் அசுத்தப்படுத்தினால், உங்களுக்கு முன்னே அங்கே வாழ்ந்த நாட்டினரை அது வாந்திபண்ணியதுபோல, உங்களையும் அது வாந்திபண்ணிவிடும். “ ‘யாராவது இந்த அருவருப்பான செயல்களில் எதையாவது செய்தால், அப்படிப்பட்டவர்கள் தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். ஆகவே நீங்கள் என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் வரும் முன்பு அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த அருவருப்பான வழக்கங்களில் எதையாவது பின்பற்றி, அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா’ ” என்றார்.