லேவியராகமம் 18:1-21
லேவியராகமம் 18:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்: நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர். ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர். உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது. உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது. உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம். உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள். உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள். உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது. உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்குபடி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு. உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம் பண்ணலாகாது. ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம். நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
லேவியராகமம் 18:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேலரிடம் பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. நீங்கள் முன்பு வாழ்ந்துவந்த எகிப்தில், உள்ளவர்கள் செய்ததுபோல் நீங்களும் செய்யவேண்டாம். நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டில் உள்ளவர்கள் செய்கிறதுபோலவும் செய்யவேண்டாம். அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றவும் வேண்டாம். நீங்களோ என்னுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, என் கட்டளைகளைப் பின்பற்றக் கவனமாயிருங்கள். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகவே நீங்கள் என்னுடைய கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றிற்குக் கீழ்ப்படிகிறவன் எவனும் அவற்றால் வாழ்வு பெறுவான். நானே யெகோவா. “ ‘பாலுறவுகொள்ளும்படி யாரும் நெருங்கிய உறவினரை அணுகக்கூடாது. நானே யெகோவா. “ ‘நீ உன் தாயுடன் பாலுறவுகொண்டு, உன் தகப்பனை கனவீனப்படுத்தாதே. அவள் உன் தாய். அவளுடன் பாலுறவு கொள்ளாதே. “ ‘நீ உன் தகப்பனின் மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் தகப்பனைக் கனவீனப்படுத்தும். “ ‘நீ உன் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. உன் தகப்பனின் மகளோடு அல்லது உன் தாயின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அவள் உன் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பிறந்திருந்தாலும் சரி, அவளுடன் பாலுறவு கொள்ளாதே. “ ‘உன் மகனுடைய மகளோடு, உன் மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அதுவும் உன்னைக் கனவீனப்படுத்தும். “ ‘உன் தகப்பனுக்குப் பிறந்த, உன் தகப்பனின் மனைவியின் மகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவளும் உனக்குச் சகோதரிதான். “ ‘உன் தகப்பனுடைய சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் தகப்பனுடைய நெருங்கிய உறவினள். “ ‘உன் தாயின் சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே; ஏனெனில் அவள் உன் தாயினுடைய நெருங்கிய உறவினள். “ ‘உன் தகப்பனுடைய சகோதரனின் மனைவியுடன் பாலுறவு கொள்வதற்காக, அவளை நெருங்குவதினால் அவனைக் கனவீனப்படுத்தாதே. அவள் உன்னுடைய சிறியதாய். “ ‘உன் மருமகளுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் மகனின் மனைவி; அவளுடனும் பாலுறவு கொள்ளாதே. “ ‘உன் சகோதரனுடைய மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் சகோதரனைக் கனவீனப்படுத்தும். “ ‘தாயும் மகளுமான இருவருடனும் பாலுறவு கொள்ளாதே. அவளுடைய மகனின் மகளோடு, மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. இவர்களும் அவளுக்கு நெருங்கிய உறவுள்ளவர்கள். இது ஒரு கொடுமையான செயல். “ ‘உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்குப் போட்டியாக, அவள் சகோதரியை உனக்கு மனைவியாக்கி அவளுடன் பாலுறவு கொள்ளலாகாது. “ ‘ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் அசுத்தமாய் இருக்கும்போது, பாலுறவுகொள்ளும்படி அவளை நெருங்காதே. “ ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம். “ ‘நீங்கள் உங்கள் பிள்ளைகள் ஒருவரையும், மோளேக்கு தெய்வத்திற்குப் பலியிடப்படுவதற்காகக் கொடுத்து, உங்கள் இறைவனுடைய பெயரை இழிவுபடுத்த வேண்டாம். நானே யெகோவா.
லேவியராகமம் 18:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா. நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா. “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா. உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது. உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது. உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம். உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள். உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள். உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது. உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு. உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது. “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம். நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா.
லேவியராகமம் 18:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)
மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர். “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்! “நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும். “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம். “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள். “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள். “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது குமாரனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும். “நீ தாய்-குமாரத்தி இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது குமாரத்தியின் குமாரத்தியாகவும் குமாரனின் குமாரத்தியாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல். “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள். “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும். “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.