லேவி 18:1-21

லேவி 18:1-21 IRVTAM

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா. நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. “ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா. “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா. உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது. உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது. உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம். உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள். உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள். உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது. உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு. உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது. “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம். நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா.