லேவியராகமம் 17:7-16

லேவியராகமம் 17:7-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் எந்த ஆட்டின் உருவமுடைய விக்கிரங்களைப் பின்பற்றி வேசித்தனம் பண்ணுகிறார்களோ, அவைகளுக்கு இனிமேலும் அவர்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கும், அவர்களுடைய தலைமுறைகளுக்கும் ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.’  “மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘எந்த ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனோ, ஒரு தகன காணிக்கையையாவது பலியையாவது செலுத்தும்போது, அதை யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக, சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும். “ ‘எந்த ஒரு இஸ்ரயேலனாவது அல்லது அவர்களுக்குள் வாழும் ஒரு பிறநாட்டினனாவது, எந்த இரத்தத்தையாகிலும் சாப்பிடுவானாகில், இரத்தத்தைச் சாப்பிட்டவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவனை அவனுடைய மக்களிலிருந்து அகற்றிவிடுவேன். ஏனெனில் ஒரு உயிரினத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. பலிபீடத்தின்மேல் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். ஒருவனது வாழ்வுக்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே. ஆகவே நான் இஸ்ரயேலரிடம், “உங்களில் ஒருவனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது, உங்கள் மத்தியில் தங்கும் பிறநாட்டினனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது” என்று சொல்லியிருக்கிறேன். “ ‘சாப்பிடக்கூடிய மிருகத்தையோ, பறவையையோ வேட்டையாடுகிற எந்த இஸ்ரயேலனாவது அல்லது உங்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனாவது அதன் இரத்தத்தை வெளியே வடியவிட்டு அதை மண்ணால் மூடிவிடவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே. ஆகவேதான் நான் இஸ்ரயேலரிடம், “நீங்கள் எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே; அதைச் சாப்பிடுகிற எவனும் அகற்றப்படவேண்டும் என்றேன்.” “ ‘தன் நாட்டினனோ அல்லது பிறநாட்டினனோ, இறந்துகிடக்கக் காணப்பட்டதை அல்லது காட்டு மிருகங்களால் கிழிக்கப்பட்டுச் செத்ததை ஒருவன் சாப்பிட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் சம்பிரதாய முறைப்படி மாலைவரை அசுத்தமானவன். அதன்பின் அவன் சுத்தமாவான். ஆனால் அவன் உடைகளைக் கழுவி முழுகாவிட்டால், அந்தக் குற்றத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்’ ” என்றார்.

லேவியராகமம் 17:7-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும். சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான். அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல்” என்றார்.

லேவியராகமம் 17:7-16 பரிசுத்த பைபிள் (TAERV)

தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை. “ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள். “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன். ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது. “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும். இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான். “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.

லேவியராகமம் 17:7-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது. மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளையிட்டு, அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப்பண்ணுவேன். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன். சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும் அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைச் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான். அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.