லேவியராகமம் 17
17
இரத்தத்தை சாப்பிடத்தடை
1யெகோவா மோசேயிடம், 2“நீ ஆரோனிடமும் அவன் மகன்களிடமும், இஸ்ரயேலரிடமும் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கட்டளையிட்டது இதுவே: 3இஸ்ரயேலன் எவனும் பலி செலுத்துவதற்காக, முகாமுக்குள் அல்லது முகாமுக்கு வெளியே ஒரு மாட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டையோ வெட்டிக் கொன்றால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 4ஏனெனில் அந்த மிருகங்களை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தும்படி, யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு முன்பாக சபைக் கூடாரவாசலுக்கு கொண்டுவந்து வெட்டவில்லை. அதனால் அவன் இரத்தம் சிந்திய குற்றவாளியாக எண்ணப்படுவான். அவன் இரத்தம் சிந்தியிருக்கிறான். அவன் தன் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும். 5இதனால் இஸ்ரயேலர் தாம் இப்பொழுது திறந்தவெளிகளில் செலுத்தும் பலிகளை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவர்கள் அவற்றை ஆசாரியனிடம், அதாவது யெகோவாவிடம், சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவந்து, சமாதான காணிக்கையாகப் பலியிடவேண்டும். 6ஆசாரியன், சபைக்கூடார வாசலில் இருக்கும் யெகோவாவின் பலிபீடத்தில் இரத்தத்தைத் தெளித்து, கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்கவேண்டும். 7அவர்கள் எந்த ஆட்டின் உருவமுடைய விக்கிரங்களைப்#17:7 விக்கிரங்களை அல்லது பேய்கள் பின்பற்றி வேசித்தனம் பண்ணுகிறார்களோ#17:7 யெகோவாவை வணங்க பொருத்தனை செய்தபிறகு வேறொரு கடவுளை வணங்குகிறவர் அல்லது அதற்கு பலி செலுத்துபவர் விபசாரம் செய்கிறவரைப் போன்றவர். யாத். 20:4‑6; 34:15‑16., அவைகளுக்கு இனிமேலும் அவர்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கும், அவர்களுடைய தலைமுறைகளுக்கும் ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.’
8“மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘எந்த ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனோ, ஒரு தகன காணிக்கையையாவது பலியையாவது செலுத்தும்போது, 9அதை யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக, சபைக்கூடார வாசலுக்குக் கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
10“ ‘எந்த ஒரு இஸ்ரயேலனாவது அல்லது அவர்களுக்குள் வாழும் ஒரு பிறநாட்டினனாவது, எந்த இரத்தத்தையாகிலும் சாப்பிடுவானாகில், இரத்தத்தைச் சாப்பிட்டவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவனை அவனுடைய மக்களிலிருந்து அகற்றிவிடுவேன். 11ஏனெனில் ஒரு உயிரினத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. பலிபீடத்தின்மேல் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி நான் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். ஒருவனது வாழ்வுக்காகப் பாவநிவிர்த்தி செய்வது இரத்தமே. 12ஆகவே நான் இஸ்ரயேலரிடம், “உங்களில் ஒருவனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது, உங்கள் மத்தியில் தங்கும் பிறநாட்டினனும் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது” என்று சொல்லியிருக்கிறேன்.
13“ ‘சாப்பிடக்கூடிய மிருகத்தையோ, பறவையையோ வேட்டையாடுகிற எந்த இஸ்ரயேலனாவது அல்லது உங்கள் மத்தியில் வாழும் எந்த பிறநாட்டினனாவது அதன் இரத்தத்தை வெளியே வடியவிட்டு அதை மண்ணால் மூடிவிடவேண்டும். 14ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே. ஆகவேதான் நான் இஸ்ரயேலரிடம், “நீங்கள் எந்த உயிரினத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம். ஏனெனில், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் அதன் இரத்தமே; அதைச் சாப்பிடுகிற எவனும் அகற்றப்படவேண்டும் என்றேன்.”
15“ ‘தன் நாட்டினனோ அல்லது பிறநாட்டினனோ, இறந்துகிடக்கக் காணப்பட்டதை அல்லது காட்டு மிருகங்களால் கிழிக்கப்பட்டுச் செத்ததை ஒருவன் சாப்பிட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் சம்பிரதாய முறைப்படி மாலைவரை அசுத்தமானவன். அதன்பின் அவன் சுத்தமாவான். 16ஆனால் அவன் உடைகளைக் கழுவி முழுகாவிட்டால், அந்தக் குற்றத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்’ ” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
லேவியராகமம் 17: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.