லேவியராகமம் 16:1-5
லேவியராகமம் 16:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும். அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
லேவியராகமம் 16:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன். “ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகவேண்டிய விதம் இதுவே: பாவநிவாரண காணிக்கையாக ஒரு இளங்காளையோடும், தகன காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக்கடாவோடும் அவன் வரவேண்டும். அப்பொழுது அவன் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும் மென்பட்டு உடையையும், பரிசுத்த மென்பட்டு உள் அங்கியையும் உடுத்திக்கொள்ளவேண்டும். மென்பட்டுக் கச்சையை இடையில் கட்டி, மென்பட்டு தலைப்பாகையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவையே பரிசுத்த உடைகள். எனவே அவன் இவற்றை உடுத்திக்கொள்ளும் முன், தன்னைச் சுத்தப்படுத்துவதற்காக தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமிருந்து பாவநிவாரண காணிக்கைக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும், தகன காணிக்கைக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும்.
லேவியராகமம் 16:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி நுழையவேண்டும். அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை அணிந்து, தன் இடுப்பிற்குச் சணல்நூல் உள்ளாடையைப் போட்டு, சணல்நூல் இடுப்புக்கச்சையைக் கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத் அணிந்துகொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த உடைகள்; அவன் தண்ணீரில் குளித்து, அவைகளை அணிந்துகொண்டு, இஸ்ரவேல் மக்களாகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்கதகனபலியாக ஒரு ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.
லேவியராகமம் 16:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆரோனின் இரண்டு குமாரர்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம், “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்! “ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும். ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள். “ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.