லேவியராகமம் 16:1-5

லேவியராகமம் 16:1-5 TCV

ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார். யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன். “ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகவேண்டிய விதம் இதுவே: பாவநிவாரண காணிக்கையாக ஒரு இளங்காளையோடும், தகன காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக்கடாவோடும் அவன் வரவேண்டும். அப்பொழுது அவன் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும் மென்பட்டு உடையையும், பரிசுத்த மென்பட்டு உள் அங்கியையும் உடுத்திக்கொள்ளவேண்டும். மென்பட்டுக் கச்சையை இடையில் கட்டி, மென்பட்டு தலைப்பாகையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவையே பரிசுத்த உடைகள். எனவே அவன் இவற்றை உடுத்திக்கொள்ளும் முன், தன்னைச் சுத்தப்படுத்துவதற்காக தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமிருந்து பாவநிவாரண காணிக்கைக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும், தகன காணிக்கைக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும்.