புலம்பல் 3:13-24

புலம்பல் 3:13-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார். நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார். அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது. நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”

புலம்பல் 3:13-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

புலம்பல் 3:13-24 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார். நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள். கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார். கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். அவர் என்னைத் தூசியில் தள்ளினார். நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன். நான் எனக்குள், “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன். கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும். நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன். ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்: கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை. ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது! நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

புலம்பல் 3:13-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார். நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.