புலம்பல் 3:13-24

புலம்பல் 3:13-24 TCV

அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார். நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார். அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார். நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன். ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.” நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன். நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று. ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு: அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை. உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது. நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”