யோசுவா 9:7-15
யோசுவா 9:7-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு இஸ்ரயேல் மனிதர் அந்த ஏவியரிடம், “ஒருவேளை நீங்கள் எங்களுக்கு அருகில் வாழ்பவர்களாய் இருக்கக்கூடும். அப்படியானால் நாங்கள் உங்களோடு எப்படி உடன்படிக்கை செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் அடிமைகள்” என்றனர். ஆனாலும் யோசுவா அவர்களிடம், “நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் புகழின் நிமித்தம், உங்கள் அடியவர்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறோம். ஏனெனில், அவர் எகிப்திலே செய்த செயல்கள் எல்லாவற்றைப்பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டோம். மேலும், அவர் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள அஸ்தரோத்தில் ஆட்சி செய்த எமோரியரின் இரண்டு அரசர்களான, எஸ்போனின் அரசனாகிய சீகோனுக்கும், பாசானின் அரசனாகிய ஓகுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள். உங்களிடம் வருவதற்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, இந்த அப்பங்களைச் சுடச்சுடக் கட்டிக்கொண்டு வந்தோம். இப்பொழுதோ இவைகள் எவ்வளவாய்க் காய்ந்து பூசணம் பிடித்திருக்கின்றன என்று நீங்களே பாருங்கள். இந்தத் திராட்சை தோற்குடுவைகள் நாங்கள் நிரப்பியபோது புதிதாய் இருந்தன. ஆனால் இப்பொழுது எவ்வளவாக கிழிந்துவிட்டன என்று பாருங்கள். மிக நீண்ட பிரயாணத்தினால், எங்கள் உடைகளும் பாதணிகளும் பழசாய்ப்போய்விட்டன” என்றார்கள். இஸ்ரயேலர், அவர்களுடைய உணவுப்பொருளில் கொஞ்சம் எடுத்து ருசிபார்த்தார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை. அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர்.
யோசுவா 9:7-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் அந்த ஏவியர்களை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்கள்; நாங்கள் எப்படி உங்களுடன் உடன்படிக்கை செய்யமுடியும் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைக் கேள்விப்பட்டு, உமது அடியார்களாகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய புகழ்ச்சியையும், அவர் எகிப்திலே செய்த எல்லாவற்றையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடம் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்களுடைய வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சைரசத் தோல்பைகளை நிரப்பும்போது புதிதாக இருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோனது; எங்கள் உடைகளும், காலணிகளும் நெடுந்தூர பிரயாணத்தினாலே பழையதாகப்போனது என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்கள்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்காமல் அவர்களுடைய உணவுப்பதார்த்தங்களிலே சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடு சமாதானம்செய்து, அவர்களை உயிரோடு காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடு செய்தான்; அதற்காக சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தார்கள்.
யோசுவா 9:7-15 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேலர் அந்த ஏவியரிடம், “நீங்கள் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அருகே எங்கேயேனும் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வரைக்கும் உங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்யமாட்டோம்” என்றனர். ஏவியர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உமது பணியாட்கள்” என்றனர். ஆனால் யோசுவா, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அந்த ஆட்கள் அதற்குப் பதிலாக, “நாங்கள் உங்கள் பணியாட்கள். நாங்கள் தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய மிகுந்த வல்லமையை அறிந்ததால் இங்கு வந்தோம். அவர் செய்த காரியங்களை அறிந்துள்ளோம். அவர் எகிப்தில் செய்தவற்றையும் அறிந்தோம். யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் ராஜாக்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம். எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள். இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தியுங்கள்.’ அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள். “எங்கள் அப்பத்தைப் பாருங்கள்! நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு உங்களிடம் வரும்படி பயணம் செய்யத் துவங்கியபோது அது சூடாகவும், புதியதாகவும் இருந்தது. ஆனால் இப்போது உலர்ந்து பழையதாகப் போய்விட்டது. எங்கள் திராட்சைரசப் பைகளைப் பாருங்கள்! நாங்கள் வீட்டிலிருந்து வந்தபோது அவை புதிதாகவும் திராட்சைரசம் நிரப்பப்பட்டவையாகவும் இருந்தன. இப்போது அவை கிழிந்து, பழையனவாகிவிட்டன. எங்கள் உடைகளையும், பாதரட்சைகளையும் பாருங்கள்! நாங்கள் அணிந்து கொண்டிருப்பவை பயணத்தால் கிழிந்துபோயிருப்பதைக் காண்பீர்கள்” என்றனர். அந்த ஆட்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை அறிய இஸ்ரவேலர் விரும்பினர். எனவே அவர்கள் அப்பத்தை ருசி பார்த்தனர். ஆனால் அவர்கள் செய்யவேண்டியது என்னவென்று கர்த்தரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. யோசுவா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டான். அவர்களை வாழவிடுவதாக ஒப்பந்தம் செய்தான். யோசுவாவின் இந்த வாக்குறுதிக்கு இஸ்ரவேலின் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
யோசுவா 9:7-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாம் என்றார்கள். அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.